Our Family Mentor

by Dr E. Ramanathan

என் அன்பான பெற்றோர்களே, தயவுசெய்து குருகுலக்கல்வி முறைக்குத் திரும்புங்கள்.

ரெகக்னிஷனுக்கு வேண்டுமானால், அருகாமையில் உள்ள பள்ளியில் சேருங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கேற்ற துறையில் சிறந்து விளங்க தனிப்பட்ட குருகுல முறையில் நல்லாசிரியர்களின் இல்லத்தில் சேர்த்து பயன் பெறுங்கள்.

அன்பான பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே. ஆனால் அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

கல்வித் தேடல் மற்றும் வேலை வாய்ப்பு என்ற தலைப்புகளில் நான் பல சொற்றொடர்கள் ஆற்றி இருக்கின்றேன். இவைகள் அனைத்தும் நான் பெற்ற பள்ளிக்கல்வி , கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சித் துறையில் நான் கற்றுக்கொண்ட எனது தனிப்பட்ட அனுபவங்கள், வேலையை தேடும் போதும், வேலையில் இருக்கும் போதும், வேலையை விட்ட பிறகும், எனக்கென்று ஒரு சிறு கல்வி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்ட போதும், அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களின் ஆலோசகராக பலருக்கு பயிற்சி கொடுக்கும் போதும், தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பை தேடுவோர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், நான் கற்றுக் கொடுக்கின்ற, அதே சமயத்தில், மாணவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்கின்ற அனுபவங்களின் சாரம்தான் இந்த சிறு சிறு சொற்பொழிவுகள் மற்றும் கருத்துரைகள்.

உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு, நான் மிகச்சிறந்த மேதையோ, மனிதனோ அல்லது அறிஞரோ கிடையாது என்பது என் சிற்றறிவுக்கு நன்கே தெரியும். இருப்பினும், உங்களுக்கு நான் எடுத்தியம்புவது மூலம், என்னை நானே விழிப்படையச்செய்து கொள்கின்றேன் என்பதுதான் உண்மை.

நான் சிறுவயதில் இருக்கும் போது பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பால விகாஸ் பயிற்சியை ஆறு வயதில் இருந்து பதினெட்டு வயது வரை முறையாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கற்றுக்கொண்ட ஆன்மீக கல்விதான் என் வாழ்க்கையின் ஆணி வேராக பாய்ந்து உள்ளது.

டிப்ளமோ இன் சத்ய சாயி எஜுகேஷன் என்ற பட்டயத்தை 23 நவம்பர் 1981 ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா கையெழுத்திட்ட இந்த பட்டயத்தை சென்னை சுந்தரம் கோவிலை பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபா 1982-ல் திறந்து வைத்தபோது ஒரு சிறு குழுவுடன் எனக்கும் சேர்த்து கொடுத்தார் என்பது எனது வாழ்க்கையில் கிடைத்த பெரும்பாக்கியம் என்றே கருதுகின்றேன். இதனை என்னுடைய PhD பட்டத்தை விட உயர்வாக மதிக்கின்றேன்.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை இன்று பகர்கின்றனர் நம் சான்றோர்கள். பி ஹெச் டி என்பது நான் பெற்ற கல்வியின் பொன் மகுடம் என்றால், என்னுடைய பால விகாஸ் கல்விப் பட்டயம் அப் பொன் மகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தின கற்கள் என்று கருதுகிறேன்..

எனவே, நான் என் அன்பான அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் குழந்தைகளை ஞாயிறு தோறும் ஆன்மீக பயிற்சி வகுப்புகளுக்கு தயவு செய்து அனுப்புங்கள்.

நம் பிள்ளைகள் இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், சனாதன தர்மத்தையும் நன்கு பயின்று அதனை தங்களுடைய வாழ்க்கையில் அவசியமாக பின்பற்ற வேண்டும்.

லெளஹீகமும், ஆன்மீகமும் நம் வாழ்க்கை இரயில் வண்டியின் தண்டவாளங்களை போன்று இணை பிரியாது இருத்தல் வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை பயணம் இந்த சமூகத்தில் சுமூகமாக இருக்கும்.

மதம் என்பது மக்களை நல்வழிப்படுத்த அமைந்த ஒரு பிணைக் கயிறு போன்றது. தெய்வ ப்ரீத்தி, பாப பீதி, சங்க நீதி – இதுதான் ஒவ்வொரு மதத்தின் சாரம்சம். அதாவது, நமது பாரதீயர்கள், தெய்வத்தின் மேல் பக்தி கொண்டிருக்கவேண்டும். பாவம் செய்ய அஞ்சவேண்டும். சமூக நீதியை பேணவேண்டும். இவ்வாறு நடந்தால், தனி நபர் ஒழுக்கம் மேம்படும். நம்மைச்சார்ந்த குடும்பமும், சமுதாயமும் மேன்மையடையும்.

ஒவ்வொரு மதமும், மனித நேயத்தையும், அன்பையும் தான் போதிக்கின்றது. இதில் எந்த விதமான வெறுப்புணர்வும் இருத்தலாகாது.

மதச்சார்பின்மை என்று சொல்வது அறியாமை. போலித்தனம். மதப் பேதமை அல்லது மத துவேஷம், வெறுப்புணர்வு நம் இளம் சிறார்கள் மத்தியில் என்றைக்குமே விதைத்து விடக்கூடாது. அது கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொருவரும், நம் தாய் மண்ணை பற்றியும், நம்மூரைச்சேர்ந்த கனிம, கரிம, நீர் வளங்களைப் பற்றியும், தாய் மொழியைப் பற்றியும், தாய் மதத்தை பற்றியும், நம் பெரியோர்களது வரலாற்றை பற்றியும், நன்கு அறிந்திருத்தல் வேண்டும். வரலாற்றை படிப்பதன் மூலம், நம் முன்னோர்கள் செய்த பெருங்காரியங்களை அடுத்த படிக்கட்டுக்கு எடுத்துச்செல்லவேண்டும். அவர்கள் செய்த தவறுகளை நாம் ஒதுக்கி அவர்கள் போட்ட இராஜபாட்டையை மேம்படுத்த வேண்டும்.

பிற மொழியைப் பற்றியோ அல்லது பிற மதத்தைப் பற்றியோ தெரிந்து கொள்வது தவறில்லை. அதை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை.

எனினும், நம் பிறந்த மண் சார்ந்த நம்பிக்கைகளை நாம் என்றுமே எதிர்க்கக் கூடாது. ஏனெனில், நம் ஒவ்வொரு சமூகத்தின் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நம் கால தேச வர்த்தமானங்களுக்கு இணங்க, சில நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும், ஒழுக்கங்களையும், நமக்கு கற்பித்து இருக்கின்றார்கள். அதை நாம் ஏற்று பின்பற்றுதல் என்பது நமது பிறவிக் கடன்.

தாய்மொழி பற்று இல்லாதவன், தாய் மண் பற்று இல்லாதவன், தாய் மதப்பற்று இல்லாதவன், ஏன் தாய் நாட்டில் இருக்க வேண்டும்?

என்னை பொருத்தவரை, இந்த மூன்றும் இல்லாதவர்கள் பரதேசிகள். இது ஏதோ கொச்சையான வார்த்தை என்று கருதி விடாதீர்கள். அயல் நாட்டவர்கள் என்று சொல்ல வந்தேன்.

இமயம் முதல் குமரி வரை நம்முடைய அகண்ட பாரதம் இந்த உலகிற்கு ஒரு அற்புத வழிகாட்டி என்பதை என்றுமே மறந்து விடாதீர்கள்.

இன்று நேற்று அல்ல நம்முடைய கலாச்சாரத்தின் வயது. பல்லாயிரக்கணக்கான வருடங்களையும் தாண்டியது நமது மூத்த குடி சமூகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சனாதன தர்மம் என்பது மொழியினாலோ, இனத்தினாலோ, காலத்தினாலோ சூழ்நிலைகளினாலோ என்றுமே மாறாத, இளமை குன்றாத, பாரத தேசத்தின் வற்றாத ஜீவநதி. இதைப் பற்றிய சரியான, தெளிவான புரிதல் தான் நம்மிடம் இல்லை.

சனாதன தர்மத்தை நாம் நன்கு தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும், மற்றவர்களுக்கு புரிய வைப்பதும், பெற்றோர்களாகிய நமது கடமை.

சனாதன தர்மம் என்றாலே வர்ணாசிரமத்தை கற்பிக்கும் பிரிவினைவாத சக்தி என்று நம்மில் பலரும், தவறான எண்ணங்களை இளம்பிள்ளைகளுக்கும் விதைக்கின்றார்கள். இது ஒரு மாபெரும் தவறு.

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வித வர்ணங்கள் நாம் உகந்து ஏற்கும் தர்மங்களையும் வேலைகளையும் வாழ்க்கை முறைகளையும் தான் குறிப்பிடுகிறதேயன்றி, மனிதர்களிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளையல்ல.

என்னைப்பொறுத்தவரையில், ஒரு தச்சுத்தொழில் செய்பவர் தன் தொழிலின் அடிப்படை நிலையில் உள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பல்வேறு சூத்திரங்களையும், தொழில்திறன்களையும் பயிலும் கட்டத்தில் உள்ளார். படிப்படியாக பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அத்தொழிலை வைத்து சம்பாரிக்க ஆரம்பித்து, வைஷ்யனாக மாறி, அத்தொழிலில் மேம்பாடடைந்து, மற்றவர்களும் பயன்பட ஒரு தொழிற்கல்விக்கூடத்தை தோற்றுவித்து, ஒரு ஆலோசனையாளராக போகும்போது அவர் அத்தொழில் சார்ந்த பிராமணனாக மாறுகின்றார். அதாவது ஒரு குரு நிலைக்குச்செல்கின்றார்.

நம் இந்திய மக்கள் உடல் நிறத்தால் வடிவமைப்பால் மொழியால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் நமது ரத்தம் ஒரே சிவப்பு தானே. நம் செல்களில் இருக்கும் டிஎன்ஏ ஒரே விதமாகத்தான் அமைந்துள்ளது என்பது அறிவியல் அத்தாட்சி.

இவ்வாறிருக்க, நம்மை நாமே வேறுபடுத்திக் கொள்வது என்பது கயமை. இனத் தலைவர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளும் போலி அரசியல்வாதிகளை என்றுமே நம்பாதீர்கள். அவர்களுடைய பேச்சை புறந்தள்ளுங்கள்.

இத்தகைய மதிகெட்டவர்களின் பேச்சு நல்ல பாலில் கலந்த ஒரு துளி விஷம் போன்றது. நம் மனதை கெடுத்து விடும், செயல்களை கெடுத்து விடும், நம் நாட்டையும் கெடுத்து விடும்.

நம் பிள்ளைச் செல்வங்களுக்கு நம் சாஸ்திர விதிகளை நன்கு கற்றுக் கொடுங்கள்.

உங்களுக்கு சரியாகத் தெரியா விட்டால் நம் சாஸ்திரங்களை உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள நல்ல பண்பாளர்களிடம் அனுப்பி பழையபடி நமது குருகுலக் கல்வியை, ஆன்மீக கல்வியை வாரத்திற்கு ஒரு நாளாவது கற்பிப்பதற்கு தயாராகுங்கள்.

நான் இந்த உரையில் மூன்று முக்கிய விஷயங்களை பற்றி பேச போகின்றேன்.

ஒன்று வர்ணாஸ்ரமம், இரண்டு ஆசிரமம், மூன்று புருஷார்த்தங்கள். இம்மூன்றுமே சனாதன தர்மம் இயம்பும் நம் வாழ்வின், மற்றும் நாம் வாழும் இச்சமூகத்தின் முப்பரிமாணங்கள். ஏற்கனவே சொன்னது போல வர்ணாசிரமங்கள் என்றால் நமக்கு ஏற்ற தனிப்பட்ட தர்மத்தை தர்மத்தை அதாவது பொருளீட்டுவதற்கான வேலையை தேர்ந்தெடுத்தல்.
இதை நாம், நம் வாழ்க்கையின் நான்கு கட்டங்களாக கட்டமைப்பு செய்து கொள்ளலாம்.

ஆசிரமங்கள் என்று சொல்லக்கூடிய நான்கு வாழ்க்கை கட்டங்கள் என்னவென்றால் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஷ்தம், சந்நியாசம் என்பதே.

புருஷார்த்தங்கள் என்றால் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பதே. அதாவது அறம் பொருள் இன்பம் வீடு என்பதாகும்.

இந்த மூன்று விஷயங்களையும் தனித்தனியாக முதலில் ஆராய்வோம். பிறகு இதனை நாம் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைத்து மேட்ச் த ஃபாலோயிங் என்று சொல்வார்களே, அதைப் போல சரியான கனெக்டிங் பாயிண்ட் என்று சொல்வோம் அல்லவா, அதனை பயன்படுத்தி, இந்த மூன்றின் உள் அர்த்தங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நம்முடைய ஆசிரமம் என்ற சிஸ்டத்தை பற்றி முதலில் பேசுவோம்.

பிரம்மச்சரியம் என்பது பிறந்ததிலிருந்து 25 வயது என்று சொல்லலாம். அந்த வயது வரை நம்முடைய மாணவப் பருவம் என்று புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது கிரகஸ்தம். அதாவது நம்முடைய இல்லற வாழ்வு 25 லிருந்து 50 வரை என்று எடுத்துக் கொள்ளலாம்.
வானபிரஸ்தம் என்பது ஒரு ரிட்டையர்டு லைப். ரிலாக்ஸ்ட் ஸ்டேஜ். அதாவது ஐம்பதில் இருந்து 75 வயது வரை என்று சொல்லலாம்.

சன்நியாசம் என்பது தவ வாழ்க்கை. 75 வயது முதல் நம் ஆயுட்காலம் முடியும் வரை என்று நாம் வகுத்துக் கொள்ளலாம்.

இதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிக்கோள் நமக்குள்ளது.

பிரம்மச்சர்ய பருவத்திற்கு தர்மம் அதாவது தொழிலை (தர்மம்) தேர்ந்தெடுப்பதுதான் குறிக்கோள்.

கிரஹஸ்தனுடைய இலட்சியம் செல்வம் (அர்த்தம், பொருள்) சேர்ப்பது. குழந்தை செல்வத்தையும் சேர்த்துதான் சொல்கின்றேன்.

வானப்ரஸ்தம் நிலையில், நாம் சேர்த்த செல்வத்தை அளவுடன் நுகர்ந்து (காமம்) இல்லறத்தில் இன்பமடைந்து அடுத்த கட்டத்திற்க்கு செல்வதற்கு தயாராவது.

சந்நியாச பருவத்தில், நாம் சேர்த்த நல் மதிப்பையும், வாழ்க்கை பாடத்தையும், செல்வத்தையும், இயற்கை வளத்தையும் இச்சமூகத்திற்க்கு பறை சாற்றுவது, விட்டுச்செல்வது.

இப்போது, இந்த ஒவ்வொரு பருவத்தையும் பற்றி நாம் மேலும் ஆராய்வோம்.

நமது பிரம்மச்சரிய பருவத்தை அதாவது மாணவப் பருவத்தில் நாம் பிரம்மச்சரியத்தை நல்லொழுக்கத்தை நம் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும்
இந்த பருவத்தில் நம் குலத்திற்கு ஏற்ற, தொழிலுக்கு ஏற்ற, தர்மத்திற்கு ஏற்ற, பயிற்சி அளிக்க கூடிய பிரத்தியேகமான ஒரு குருவை தேர்ந்தெடுத்தல் மிக அவசியம்.

இக்காலக்கட்டத்தில், பல பெற்றோர்கள் நல்ல குருவை தேர்ந்தெடுப்பது என்பதை, கருத்தில் கொள்ளாமல் வசதியான பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களை பார்த்து, பிராண்ட் இமேஜ் என்ற மாயாஜால வார்த்தைகளில் மயங்கி , அட்வெர்டைஸ்மென்ட் மற்றும் சோசியல் மீடியாக்களில் காணப்படும் கவர்ச்சியான விளம்பரங்களில் மயங்கி, தன் வசதிக்கு மீறி கடனை வாங்கியாவது, தம் மக்களுக்காக செலவழித்து, பெரும் கல்வி நிறுவனங்களில் தன் பிள்ளைகளை சேர்த்துவிட்டு, தன்னையும் முட்டாளாக்கிக் கொண்டு, தம் பிள்ளைகளையும் முட்டாள்களாக்கி விடுகின்றனர். அந்தோ பாவம் நம் பெற்றோர்கள்!

இத்தகைய பெரும் கல்வி நிறுவனங்களில் அல்லது அவர்களுடைய கட்டுமான வசதிகளில் நீங்கள் மோகப்பட்டு, உங்கள் பிள்ளைகளை சேர்த்து இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கல்வியைப் பொறுத்தவரை பிரத்தியேகமான முறையில் கற்பது தான் சாலச் சிறந்தது. கெளரவத்திற்காக உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காதறீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் படிப்புதான் உங்களுக்கு கெளரவத்தை தேடிக்கொடுக்கவேண்டும்.

நம் பிள்ளைக்கு ஏற்ற, அவர்களது தனிப்பட்ட திறனுக்கு ஏற்ற கல்வியைப் புகுத்த வேண்டும். எங்கெல்லாம் சிறந்த கல்வி கிடைக்கின்றது என்று வலை வீசித்ததேடாதீர்கள் நண்பர்களே ! கிடைத்தவற்றை வைத்து தேர்ச்சி பெறுவது தேடித்திரிவதைவிட சிறந்தது. மேக் தி பெஸ்ட் இஸ் பெட்டெர் தேன் சூஸ் தி பெஸ்ட்.
எனவே, நம் பிள்ளைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட அக்காலத்திய குருகுல முறை தான், நம் பிள்ளைகளின் தொழிலை அதாவது, தர்மத்தை தேர்ந்தெடுக்கச் சிறந்தது.

இத்தகைய தனிப்பட்ட, பிரத்யேக அல்லது குருகுல முறைக்கல்விக்கு ரெகக்னிஷன் நம்முடைய அரசியல் சட்டத்தில் இல்லை என்றாலும்,பெற்றோர்களாகிய நீங்கள் இந்த குருகுல முறைக் கல்வியை பின்பற்ற ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் இந்த சமூகமே ஒரு ரெகக்னிஷன் கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

செய்வதை திருந்தச் செய் என்பதைத்தான் இந்த சமூகம் ஒவ்வொருவரிடம் எதிர்பார்க்கின்றது. இதில் எந்தத் தொழிலாய் இருந்தால் என்ன? இச்சமூகத்தில், கோடிக்கணக்கான தொழில்கள் உள்ளன. எத் தொழிலிலும் ஏற்றத்தாழ்வு கிடையாது.

கருவறை தோன்றி கல்லறை வரை சில்லறை வேண்டும் மனிதா என்பதை ஒத்துக் கொள்வோம். இருப்பினும், அந்த சில்லறை நல்வழியில் வந்ததா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.
நம் முன்னோர்கள் குலத் தொழிலை ஏன் அக்காலத்தில் பின்பற்றினர் என்பதை சற்று அலசி ஆராய்வோம்.
ஒரு ஆசிரியர் தம் பிள்ளைகள் ஆசிரியராக வேண்டும், ஒரு தச்சு தொழில் செய்பவர் தன் பிள்ளை தன்னுடைய தொழிலில் மேம்பட்டு விளங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

விவசாயி தன் பிள்ளைகள் விவசாயத் துறையில் சிறந்து விளங்குதல் வேண்டும். ஒரு வைத்தியன் தன்னுடைய தொழிலில் தன் பிள்ளை சிறந்த வைத்தியனாக பேரெடுத்தல் வேண்டும். ஒரு வியாபாரி தன்னுடைய மைந்தன் சிறந்த வியாபாரியாக உருவாக வேண்டும். ஒரு சிற்றரசன் தன் பிள்ளை ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று இவ்வாறாக ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளைப் பற்றிய கனவுகளை காண்பதில் தவறில்லை.

நம் பிரச்சனையே அந்தக் கனவு நம்முடைய வலிமைக்கு மேல், எல்லைக்கு மேல் செல்வதால் தான்! நாமும் சரியான தொழிலை தேர்ந்தெடுக்கவில்லை. நம் பிள்ளைகள் சரியான தொழிலை தேர்ந்தெடுக்கவும் விடுவதில்லை. நம் தொழிலை நாம் நன்கு கவனத்துடன் பொறுப்புடன் பணி செய்தால் வாழ்க்கையில் செம்மையடைவோம்.

நம் சோம்பேறித்தனமும், நமது ஒழுக்கமின்மையும், நாம் நேரமேலாண்மையை பேணாமேலிருப்பதால்தான் பெற்றோர்களாகிய நாம் நம் தொழிலில் வளர்ச்சி காண்பதில்லை. இதனால் நம் தொழிலை நாமே வெறுக்கின்றோம். நம் தொழிலில் முன்னேற்றம் இல்லை என்று ஒரு முடிவுக்கு வருகின்றோம். இதனால், நம் பணப்பசியை போக்கிக்கொள்ள நாம் வேறு வழியின்றி நம் பிள்ளைகளுக்கான வேலையை வெளியில் தேடுகின்றோம்.

னநம்பர்களே, பணம் மட்டும் நமது லட்சியம் இல்லை. குற்றம் குறை இல்லாது நமது சேவையை அல்லது உற்பத்தி பொருளை இந்த சமூகத்திற்கு வழங்குவது தான் நமது தொழில் தர்மம் என்பதை பெற்றோர்களாகிய நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பல பேர் எதைத் தொட்டாலும் காசு மட்டுமே குறி என்று நமது வேலையை அலச்சியத்துடன் செய்கின்றோம். காசு நமக்குத் தேவைதான். காசு என்றால் குற்றம் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். நம் தகுதிக்கு மேல் நாம் சேர்க்கும் காசு குற்றமே. காசு என்றால் ஒரு தெளிந்த நீரோடை போல் இருத்தல் வேண்டும்.
ஓரிடத்தில் பள்ளம் ஏற்பட்டால் அந்த நீர் அங்கேயே தங்கிவிடும். அதைப்போலத்தான் காசும் பணமும். கள்ளம் உள்ள உள்ளத்தில் பள்ளம் இருக்குமல்லவா? இன்றய டெக்னாலஜி ஒருவரை ஏமாற்றி பணத்தை பிடுங்கும் ட்ரிக்னோலஜியாக மாறிக்கொண்டு போகிறது. உலகம் பிறந்தது எனக்காக, ஊரிலுள்ளவன் பணமும் எனக்காக என்று சுயநலத்தின் உச்சக்கட்டத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நம்மில் பலர். செல்வத்தை நாம் கூடுதலாக நம் தகுதிக்கு மீறி சேர்த்தோம் என்றால் அச்செல்வமே நம்மை ஒருநாள் பலவீனம் ஆக்கிவிட்டு செல்வோம் வா என்று நம் உயிரையும் சேர்த்து மருத்துவமனையில் எடுத்துவிடும். அல்லது கள்வர்கள் நம்மை சூறையாடிவிடுவார்கள். அல்லது அரசு எந்திரம் நம்மை ஒரு வழியாக்கிவிடும் என்பதை நாம் இந்த சமூகத்தில் கண் கூட பார்க்கிறோமல்லவா?

அதனால்தான் நம் சனாதன தர்மத்தில் முதலாவதாக தர்மத்தையும் அதாவது அறத்தையும் அல்லது தொழிலையும் இரண்டாவதாக அர்த்தம் என்று சொல்லக்கூடிய செல்வத்தையும் அல்லது பொருளையும் மூன்றாவதாக காமத்தையும் அதாவது இன்பத்தையும் அல்லது அனுபவிக்கும் பேற்றினையும் நான்காவதாக மோக்ஷம் என்று சொல்லக்கூடிய வீடு பேற்றையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கு புருஷார்த்தங்களில் நாம் நம்முடைய குழந்தைளுக்கு, குறிக்கோளாக , அறத்தையும், வீடுபேற்றினையும் தான் கற்றுத்தரவேண்டும் . ஆனால், நம் பெற்றோர்களோ, நடுவில் உள்ள பொருள் மற்றும் இன்பத்தை த்தான் டார்கெட் செய்கிறார்கள். என்ன செய்வது நம் விஷன் சரியில்லையே . அதனால் தான், நம் குழந்தைகளும் பிற்போக்கான சில சமுதாய புல்லுருவிகளின் விஷத்தை உண்டு வீழ்கிறார்கள்.

பிரம்மச்சரியத்தில் நமக்கு ஏற்ற தொழில் தர்மத்தை பெறுவதற்காக, அதற்கான கல்வி மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக 25 வயது வரை நாம் நம் குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும். அந்த தொழில் நம் குலத்தை சார்ந்தோ அல்லது நம் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமையை சார்ந்தோ அமைய வேண்டும்.


நம் குல குருவை அல்லது நமது ஆசிரியரை அவரது வாழ்க்கை மேம்பட நாம் உதவுவது நமது இன்றியமையாத கடமையாகும். நம் வாழ்க்கையில் மேம்பட ச்செய்யும் நமக்கு ஏற்ற துணை சரியான பயிற்சி அளிக்கின்ற குருவை முதலில் நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டியது நமது கடமை. இதை தான் குரு தட்சனை என்று சொல்கிறோம்.

கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று ஏன் சொல்கின்றனர்? நல்ல சமுதாயம் என்பது அவ்வூரிலுள்ள ஆசிரியர்களை நாம் எவ்வாறு மதிக்கின்றோம் என்பதைப்பொறுத்துதான் அமையும். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். குருவும் அப்படித்தான். நல்ல மாதா, பிதா, குரு ஒருவருக்கு அமைந்தால் தெய்வம் அங்கே ஏற்கனவே கொட்டாரம் கட்டி குடியமர்ந்துவிடும்.

தற்காலத்தில் பல பயிற்சி பட்டறைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இவைகள் நம் தொழில் மற்றும் மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ள பெரிதும் பயன் புரிகின்றன.

குரு என்றால் ஏதோ ஆன்மீக கல்வி சொல்லிக் கொடுப்பவர் மட்டுமல்ல அவர் நமது வாழ்க்கையில் நமக்கு தேர்ந்தெடுத்த தொழிலை கற்றுக் கொடுப்பவராகவும் இருக்கலாம்.

முதலாவதாக நாம் நம் குழந்தைகளின் திறமை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற கல்வி அறிவை போற்றி அவர்கள் திறன்களை பயன்படுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் சொன்னால் talent, education, skill என்று முறைப்படுத்தி கூறலாம். குழந்தைகளின் திறமை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற கல்வியை அளிக்க வேண்டியது பெற்றோர்களாகிய அது கடமை. அவர்கள் திறன்களை மேம்படுத்துவது திறன் சார்ந்த பட்டறைகள் மட்டுமே. அதாவது அவர்கள் கற்ற கல்வியை அன்றாட உபயோகத்தில் பயன்படுத்தும் திறன். இதனை நேரடியான பயிற்சி மூலம் தான் அடைய முடியும். அதனால் அத்தொழில் சார்ந்த தொழில் வல்லுனரிடம் வேலை செய்து பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாரிப்பதில் கவனம் கொள்ளக்கூடாது. தொழிலைத்தான் முதலில் நன்கு பயின்றிடவேண்டும். இதைத்தான் நாம் அப்ரண்டண்ட்ஷிப் என்று கூறுகிறோம். படிப்பை முடித்தவுடனே பாக்கெட் வழிய பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற பேராசைதான் மாணவர்களிடம் உள்ளது, பெற்றோர்களிடமும் உள்ளது.

வேலை செய்து கொண்டே பயிற்சி எடுப்பது ஒரு முக்கியமான கட்டம்.

ஓகே நாம் நன்று பயிற்சி எடுத்து விட்டோம். நம் நல்லாசிரியர் ஆசீர்வாதங்களுடன் நாம் நமக்கு ஏற்ற தொழிலை மேற்கொண்டு விட்டோம், அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டோம் என்று கொள்வோம்.

இதற்குப் பிறகு தான் நம் தொழில் தர்மத்தை இந்த சமூகத்தில் பயனாளர் எதிர்பார்ப்புக்கு இணங்க நல்ல முறையில் எடுத்துச் சென்று அதன் மூலம் இச்சமூகத்திற்கு நம் தொழில் இன்றியமையாத ஒன்றாக மாற்றிட வேண்டும்.

பொதுவாக இதனை டீனா பேக்ட்டர் அதாவது டி ஐ என் ஏ (TINA ) என்று சொல்வோம். அதாவது இதற்கு நிகர் இவரே (There is no alternative) என்று நாம் தேர்ந்தெடுத்த தொழிலில் பெயர் எடுத்தல் வேண்டும். அதன் மூலம் நாம் நல்ல செல்வங்களை சேகரிக்க முடியும்.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பார்கள். அதில் நம் பிள்ளைகள் நம்பிக்கை கொள்ளவேண்டும். பெற்றோர்களாகிய நீங்கள், ஆரம்பத்தில் அரிச்சுவடியிலேயே அவசரம் காண்பித்ததன் விளைவு, நம் மக்கள் நம்மிடம் நம்பிக்கை இழந்து அவசர கதியில், தங்கள் வாழ்க்கையை தானே தேடிக்கொள்கின்றனர். பின்னர் புலம்புகின்றனர். இன்னலுறுகின்றனர். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். சேர்ந்து முடிவெடுத்தால் அது தீர்மானம். சேராமல் தன்னிச்சையாக முடிவிடுத்தால் உங்களுக்கு ஆலோசனை சொல்ல பெரியோர்கள் அருகிலிருக்க மாட்டார்கள்.

பிரம்மச்சரிய பருவத்திலேயே பல இளைஞர்கள் தன் தொழிலை தேர்ந்தெடுக்கிறார்களோ இல்லையோ அவர்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். இதை தவறு என்று சொல்லவில்லை. இந்த உலகத்தில் எதுவுமே தவறில்லை. ஒரு செயலை அதற்கான தருணத்தில் அதற்கான பருவத்தில் செய்யாமல் அந்தப் பருவத்திற்கு முன்போ அல்லது வெகு காலம் கழித்தோ செய்தால் அந்த செயல் தவறான செயலாக கருதப்படுகிறது.

தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்பதை எண்ணிப் பார்த்து நம் பிள்ளைகள் அதனை பெற்றோர்கள் ஆலோசனையுடன் செய்தால், தவறு என்பதே புனிதச் செயலாக மாறுகிறது என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை..

நாம் எதற்கும் ஆசைப்படலாம் தவறில்லை! ஆனால் அது நமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பிடிவாதம் தான் காமம் என்று பொருள் படுகிறது. Love is selflessness. Lust is selfishness என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களாகிய நாமும் இந்த டீன் ஏஜ் பருவத்தை கடந்துதான் வந்திருக்கின்றோம். நம் வாழ்க்கையும் நம் பிள்ளைகளுக்கு ஒரு வரலாற்றுப்பாடமாக் இருத்தல் வேண்டும். அதை நம் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நாம் நாசுக்காக புரியவைத்தல் வேண்டும்.


ஓகே, இப்போது நாம் மாணவப் பருவத்தில் ஒழுங்காக கல்வி பயின்று நமக்கு தேர்ந்தெடுத்த ஒரு தொழில்துறையில் சேர்ந்து நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு, நல்ல ஆசிரியரை கௌரவப்படுத்திவிட்டு, அவருடைய ஆசீர்வாதத்துடன் நமது குல தர்மத்தையோ அல்லது இஷ்ட தர்மத்தையோ அதாவது இஷ்ட தொழிலையோ தேர்ந்தெடுத்து விட்டோம். அல்லது, அதற்கான தொழில் துறையில் சேர்ந்து விட்டோம். நம் குடும்ப வாழ்க்கையும் நாம் பெற்றோர் முன்னிலையில் நல்லபடியாக தேர்ந்தெடுத்துக் கொண்டோம். இல்லற வாழ்வில் முறையாக நடத்தி பொருட் செல்வங்களோடு குழந்தை செல்வத்தையும் சேர்த்துக் கொண்டோம்.

அதாவது அறத்தின் மூலம் பொருள் ஈட்டி இன்பம் அடைந்து விட்டோம்.
இப்பொழுது தான் பெற்றோர்களாகிய நாம் அடுத்த கட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மோட்சம் என்பதுதான் புருஷார்த்தங்களின் கடைசி குறிக்கோள். மோக்ஷம் என்றால், ஏதோ வைகுண்ட பிரார்த்தி என்று கொள்ள வேண்டாம். மோக க்ஷயமே மோக்ஷம். அதாவது நம்முடைய தனிப்பட்ட மோகங்களை அழித்து இந்த சமூக நலனில் அக்கறை காட்டுதலே ஆகும்.

இதைத்தான் தமிழில் வீடு பேறு என்கின்றனர். அதாவது உலகை விட்டு நாம் செல்கையில், நமது வருங்கால சந்ததியினருக்கு, நாம் கொண்டு வந்ததை, வென்று சேர்த்ததை, வாழ்ந்து சாதித்ததை, நமது நற்செயல்களை விட்டுச் சென்று விடை பெறுதல் வேண்டும்.

இப்போது நாம் மேட்ச் த ஃபாலோயிங் செய்வோமா?

பிரம்மச்சரிய பருவத்தில் நமக்கான தொழில் தர்மத்தை படித்து பயிற்சி செய்து மேற்கொள்ள வேண்டும். இல்லற பருவத்தில் நாம் செல்வத்தை சேர்த்திட வேண்டும். வன பிரஸ்தா பருவத்தில் நம் ஆசைகளை, காமத்தை அடக்கி நம் சமூகத்திற்காக உழைத்து, சன்யாச பருவத்தில் மோட்சத்தை நினைவில் நிறுத்தி இவ்வுலகத்திற்கு நற்காரியங்களை செய்து வீடு பெற வேண்டும்.

இந்த நான்கு பருவங்களிலும் நால்வகை தர்மங்களை கடைபிடிக்க அதனை நல்வழிப்படுத்த நமக்கு ஒரு சிறந்த மேலாண்மையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். அத்தகைய மேதகு மேலாளர்கள்தான் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள். இவர்கள் நம் சமுதாயத்தின் நான்கு முக்கியமான அங்கங்கள்.

நாம் எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கின்றோமோ அதை முறைப்படி சாஸ்திரங்களின்படி, ஆன்மீக சாஸ்திரமாக இருந்தாலும் சரி , விஞ்ஞான சாஸ்திரமாக இருந்தாலும் சரி, சமூகவியல் சாஸ்திரமாக இருந்தாலும் சரி அதை மேம்பட செய்வதற்கு நமக்கு ஓர் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் டிபார்ட்மெண்ட் வேண்டாமா? அதைச் செய்பவர்கள் தான் நம்முடைய நல்லாசிரியர்கள், குருமார்கள், ஆச்சாரியார்கள், பிராமணர்கள். அதாவது நல்ல அறிவுரையாளர்கள் mentors. பிரம்மத்தை அதாவது இறைவனை ஒவ்வொரு விஷயத்திலும் உணரக்கூடியவர்கள், உணரவைப்பவர்கள் தான் பிராமணர்கள். வெறுமனே அக்குலத்தில் பிறந்தும் எந்தவொரு நற்காரியத்திலும் சாஸ்த்ர சமீராதாயங்களை பின்பற்றாது, தன்னை பிராமணர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வோர் அனைவரும் அப்ரமாணர்களே!

நாம் சேர்க்கும் செல்வத்தை, தொழில் தர்மத்தை, தொழிலை, தொழிலில் சேர்த்த செல்வங்களை, நம் இருப்பிடங்களை பாதுகாக்க நமக்கு ஒரு வாட்ச் அண்ட் வாட் அல்லது செக்யூரிட்டி சிஸ்டம் தேவைதானே. அதனை பூர்த்தி செய்பவர்கள் தான் சத்திரியர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள். அதற்குப்பதிலாக, தங்களது வஞ்சக நச்சு பேச்சினால் மக்களை திசை திருப்பி நாட்டில் குழப்பத்தை அடையச்செய்பவர்கள் நம் தேசத்தின் நாசக்காரர்கள்.

நாம் சேர்க்கும் செல்வமோ , அல்லது தொழிலோ, அல்லது தொழில் முறையில் கிடைத்த பொருட்களோ, இதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாமா? இந்த சமூகத்திற்கு பயனடையச் செய்ய வேண்டாமா? திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்களே! அதைச் செய்பவர்கள் தான் வணிகர்கள் என்று சொல்லக்கூடிய வைசியர்கள். காசேதான் கடவுளடா, இந்த கடவுளுக்கும் இது தெரியுமாடா; கைக்கு கைமாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே என்று கொள்ளைலாபம் அடிக்கும் பேராசை வியாபாரிகள் திருடர்கள்.

எந்த ஒரு தொழிலுக்கும் தொழிற்சாலைக்கும் பொருளுக்கும் கட்டமைப்பு வேண்டுமல்லவா?

நான் அடிக்கடி மாணவர்களிடம் பேசும் போது சயின்ஸ், இன்ஜினியரிங், டெக்னாலஜி என்ற மூன்றைப் பற்றியும் அதன் வேற்றுமைகளைப் பற்றியும் அடிக்கடி கூறுவேன்.
சைன்ஸ் அதாவது அறிவியல் என்பது தத்துவங்களையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது.
இன்ஜினியரிங் என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு கருவியையோ எவ்வாறு வடிவமைப்பது, டிசைன் செய்வது என்பதாகும்.
ஒரு கருவியை கண்டுபிடித்தவுடன் அதை மக்களிடம் நேரடியாக போய் சேர்த்து அக்கருவியை பயனீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதை அறிந்து மேம்பாடு செய்பவர்கள் தான் டெக்னாலஜி என்று சொல்லக்கூடிய துறையில் விற்பன்னர்கள்.
அத்தகைய அடிப்படையான தொழில் சார்ந்த சமூகத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தித் தரும் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தவர்கள் தான் சூத்திரர்கள்! இவர்கள் இந்த சமுதாயத்தின் பேரங்கம் வகிக்கக்கூடிய பவுண்டேஷன் பில்லார்ஸ் அதாவது இந்த சமூகத்தின் அரு பெரும் தூண்கள் என்கின்றோம்.

இந்த நால்வரில் யார் ஒசத்தி என்று பார்ப்பவர்கள் கண்களில்தான் புரையோடி உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
நம் சமுதாயத்தின் நான்கு தூண்கள் இந்த நான்கு வர்ணத்தார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இதை உணர்த்துவது தான் நம் சனாதன தர்மத்தின் அடிப்படை சாசனம்.
இதைத்தான் நம் சான்றோர்கள் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் நமக்கு பறைசாற்றுகின்றனர்.
எனவே பெற்றோர்களே, இத்தகைய அடிப்படை விஷயங்களை, வெறும் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ நாம் பெரிய பேட்ச் பிராசஸ் ஆக நம் பிரத்தியேக கல்வியை கற்க முடியாது. அதற்காக, பள்ளிக்கூடமே வேண்டாம் கல்லூரிகளை இழுத்து மூடி விடுவோம் என்று இயம்புவதற்காக நான் இங்கு பேச வரவில்லை.

பள்ளிக்கூடங்களில் சமுதாயத்தில் நாம் எப்படி பழக வேண்டும், பேச வேண்டும், வாழ்க்கையில் மற்றவர்களுடன் எப்படி அனுசரித்து போக வேண்டும், என்பதை நம் பிள்ளைகள் ஒரு சிறிய மாடல் சொசைட்டியாக பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம் தனிப்பட்ட திறமைக்கான, குடும்ப வசதிகளுக்கு ஏற்ப, நம் தொழில் கல்வியை அல்லது தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, நமக்கு என்று பிரத்தியேகமான ஒரு குல குரு, தொழில்முறை சார்ந்த குரு, ஆன்மீகத்தையும் வாழ்க்கை முறையையும் தர்மத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல ஆன்மீக குரு, மிக மிக அவசியம். அதற்கான தேடுதலை ஒவ்வொரு பெற்றோரும் இன்று முதற்கொண்டு தேடி தேர்ந்தெடுத்து அவர்களிடம் நம் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து, நற்பெயர் பெற்று, நற்பயிற்சி பெற்று, நம் தொழிலை தேர்ந்தெடுத்தல் அவசியம். பெற்றோர்களாகிய நமது கடமை அத்தகைய நல்லாசிரியர்களை நம் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். பல்க் பிராசஸ் காக அதாவது பேட்ச் பிராசஸுக்காக உங்களுக்கு ஏற்ற பள்ளிகளையோ கல்லூரிகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! அதே சமயம் தனிப்பட்ட கல்வி மேம்பாடு என்பது மிக மிக அவசியம் இந்நாளில்.

Education leads one to an individual transformation. The individual transformation leads to Global Transformation. உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை உங்கள் கைகளிலே எனதருமை பெற்றோர்களே! உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இதைப்பற்றி குடும்பத்தோடு உட்கார்ந்து ஆலோசனை பெறுவதற்கு நீங்கள் என்னை நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளலாம். உங்கள் குழந்தையின் தகவல்களை என்னுடைய வாட்ஸப் எண் 9444929163 -ல் தொடர்பு கொள்ளலாம்.

வாழ்க வளமுடன் நலமுடன் குணமுடன்!