தீதும் நன்றும் பிறர்தர வாரா

கணியன் பூங்குன்றனார் வழியில் !

முனைவர் இராமநாதன் எதிராஜன்

நம் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப இறைவனும் அதற்கான எதிர் விளைவுகளை தருகிறார்.  இது வெறுமனே விஞ்ஞானம் என்று எடுத்துக்கொண்டாலும் , இதில் உள்ள மெஞ்ஞானத்தை நாம் உணர்தல் வேண்டும் . இந்த எதிர்விளைவுகள் எதற்காக என்றால், நம்மை நல்வழிப்படுத்தவே. 

உதாரணமாக நாம் சிறு குழந்தையாக இருக்கும்போதே எழுந்து நிற்க வேண்டும் என்று துடித்தால், தத்தி தத்தி கீழே விழுந்து விடுகிறோம்.  காரணம் என்னவெனில் நாம் சிறு குழந்தாய் இருக்கும்போது அன்னையின் அரவணைப்பில் இருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு என்பது இறைவனுக்கு தெரியும்.  குழந்தைக்கு தெரியாது அல்லவா?  அதற்காகத்தான்!  அதைப்போலத்தான் நாம் வளர்ந்த பிறகும் நாம் நல்லது செய்யும்போது சில சோதனைகளை தருகின்றார்.  அது நம் நற்செயல்களை பலப்படுத்தவே என்று நாம் கொள்ள வேண்டும். 

எப்படியென்றால், நாம் சுவரில் ஒரு படத்தை மாற்ற வேண்டும் என்றால் ஆணி அடித்தே ஆக வேண்டும்.  ஆணி அடித்த பிறகு,  அது சுவரில் நன்றாக பதிந்துள்ளதா என்று நாமே ஆட்டிப் பார்க்கின்றோம் அல்லவா?  அதைப்போல தான் இறைவனும் நம்முடைய நற்செயல்கள் மீண்டும் மீண்டும் நாம் சரிவர செய்கின்றோமா என்பதை சோதனை செய்கின்றார்.  நாம் பலம் கொண்டு நமது நற்செயல் என்ற ஆணியை ஆழப் பதித்திருந்தால் எத்தனை சோதனை ஆட்டங்கள் வந்தாலும் நம்மால் தாங்கி நிற்க முயலும்.  நாம் இந்த சமூகத்திற்கு முன் உதாரணமாக திகழ்வோம்.  இதைப் பார்த்து ஆனந்தப்படுபவன் நம் ஆண்டவன். 

இது நாம் செய்யும் சிறு சிறு நற்செயலுக்குத்தான் சோதனை என்பதில்லை . நாம் அன்றாடம் செய்யும் பலப்பல தீயச்செயல்களுக்கும் எதிர்வினை நம் தீச்செயல்களுக்குத் தகுந்தவாறு இறைவன் சிலச்சில பாடங்களை, சோதனைகளை நமக்குத்தருகிறார் . நாம் பல சமயங்களில் நம் மனசாட்சி சொல்லும் விஷயங்களை அலட்சியப்படுத்தி விடுகிறோம் .

தீதும் நன்றும் பிறர் தர வாரா “ என்று இதைத்தான் அன்றே பகர்ந்தார் கணியன் பூங்குன்றனார் . முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று அக்காலத்திலேயே நியூட்டன் விதியை நச்சென்று நம் முன்னோர்கள் பகர்ந்து சென்று விட்டனர் .

மனிதனுக்குத்தான் இலட்சியம் என்பதில்லை , இறைவனுக்கும் இலட்சியம் உண்டு . இறைவனது ஒரே லட்சியம் என்னவெனில் , நம்மை அவன் அளவுக்கு தூக்கிப் பார்க்க வேண்டும் என்பதே!  இதை “தத்வமஸி” (அதுதான் நீ , அந்தப் பரம்பொருள் வடிவம்தான் நீ ! ) என்று நம் சாத்திரங்களும் பறைசாற்றுகின்றன.

இது நமக்கு புரிவதில்லை!  அதனால் தான் நம் வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வந்தால் கூட அதை தாங்கக்கூடிய பக்குவம் இன்றி தவிக்கின்றோம் , புலம்புகின்றோம். இது இறைவனின் திருவிளையாடல் என்று நாம் நன்கு உணர்ந்து கொண்டால் எந்த ஒரு சோதனையையும் இறைவன் திரு அருட்கொண்டே சாதனையாக மாற்ற முடியும் என்பது திண்ணம்! 

சோதனைகளை சாதனையாக்குங்கள்! என் அன்பு நெஞ்சங்களே!