Pallavar Seppedukal Muppathu – Book Summary

பல்லவர் செப்பேடுகள் முப்பது

🎧 Voice Over

பல்லவர்கள் தோற்றம்

பல்லவர்கள் தோற்றம் பற்றி பலரும் பலவாறு கூறியிருக்கிறார்கள். சமீபத்தில், நான் படித்த “உலத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள “பல்லவர் செப்பேடுகள் முப்பது” ஏன்ற நூலில் நான் படித்த சில முக்கியமான விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.

தஞ்சாவூர் அருகில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் சிம்மவர்மனுடைய பல்லவன் பள்ளன் கோவில் செப்பேடுகள் நமக்கு பல செய்திகளை தருகின்றன.  இம்மாதிரியான செப்பேடுகள் பல்லவ அரசர்களுடைய முத்திரையுடன் கிடைக்கப்பெறுகின்றது.  இந்த அரச முத்திரை கிரந்த வடிவில்  சில வசனங்களுடன் ஆரம்பிக்கின்றது, எடுத்துக்காட்டாக, “பாத்திரத்தில் நழுவி விழுந்து திரும்ப வந்து சாஸ்திரங்களில் கொண்ட ஸ்ரீ சிம்ம வர்மனுடைய,” என்று ஆரம்பிக்கின்றது.

 துரோணர் ஒரு பாத்திரத்தில் பிறந்தவர் என்று புராணம் கூறுகிறது. துரோணம்  என்பது ஒரு யாகப்  பாத்திரம். துரோணர் பரத்வாஜ ரிஷியன் மகன் . இந்த பரத்வாஜ  முனிவர் ஒரு தருணத்தில் கிருதாசி என்ற அப்சரஸ்த்ரீ  மீது கங்கையில் மோகம் கொண்டு அதனால் வெளிப்பட்ட ரேதஸ் என்ற இனப்பிறப்பு  திரவத்தை துரோணம் என்ற யாகப் பாத்திரத்தில் ஏந்தி வைத்தார். அவ்வாறாக பிறந்தவர் தான் துரோணர். இவர் பிறப்பில் பிராமணராக இருந்தாலும் போர் தொழிலில் வல்லவராக பயிற்சி எடுத்துக் கொண்டார். ஆதலால் இவரை பிரம்ம சத்திரியர் என்று சொல்வோரும் உண்டு.  பொதுவாக பல்லவர் செப்பேடுகளில் இரண்டு பகுதிகளை காணலாம். அவையாவன, சமஸ்கிருத பகுதி மற்றும் தமிழ்ப்  பகுதி.  இதில் சமஸ்கிருதப்  பகுதி ஸ்லோக நடையில் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.  தமிழ்ப்  பகுதியோ உரைநடையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து வடிவங்கள் இருவிதமாக உள்ளன. அவையாவன, ஆணித்தலை எழுத்து மற்றும்  பெட்டித்  தலை எழுத்து என்பனவாகும். எப்பொழுதுமே, அரசனுடைய உத்தரவு சாசனங்கள், ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கள வாக்கியத்துடன் ஆரம்பிக்கும்.

பல்லவ வம்ச வழி

விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மா, பிரகஸ்பதி, சம்யு, பரத்வாஜர், துரோணர், அஸ்வத்தாமன் என்ற வரிசையில் பல்லவ அரசர்கள் தோன்றியதாக அவர்கள் எழுதி வைத்துள்ளனர். இதனை அம்புஜ நாபர் (பத்மநாபர்), அதாவது விஷ்ணு, கீர்வாநேசர்  அதாவது பிரகஸ்பதி – இவர் இந்திரனின் குரு.  மேலும், சம்யு, பரத்வாஜர், துரோணர் பிறகு அஸ்வத்தாமன் என்று வரிசைப் படுத்தியுள்ளனர். அஸ்வத்தாமன் சிவன் அம்சம் உடையதாக கூறிக் கொள்வர். அதன் வரிசையில் தங்கள் தோன்றியதாக பல்லவ அரசர்கள் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

 இதனை  சிம்ம வர்மன் மகன் சிம்ம விஷ்ணுவின் செப்பேடுகளில் காணலாம்.

பல்லவ சாசன முடிவில் “ஸி”  என்று முடிந்திருக்கும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஸித்தம் அதாவது ஸித்தப்படி என்று அந்த சாசனத்தை முடிப்பர்.

வஜ்ர நந்தி என்ற குரவர் அதாவது பெரியவர் பூஜித்த முக்கூட்டத்தார் யாவர் என்றால் அவர்கள் ஜிநேந்திரர், ஜைனேந்திரர் மற்றும் முநீந்திரர்.  இந்த வஜ்ர நந்திக்கு சிரமணாச்ரமம் என்ற கிராமத்தில் விஜயசிம்ம வர்மன் பள்ளிச் சந்தம் அளித்துள்ளான். அம்மன் சேர்க்கை என்ற கிராமத்திலும் அளித்துள்ளான்.  

நந்திவர்மன் பிள்ளைகள் சிம்ம விஷ்ணு, சுந்தர நந்தன், மற்றும் தனஞ்செயன்.  இதில் ஸ்ரீ கண்ட சோழ ஆதிராஜன் என்பவன் சுந்தரநந்தனின் மைந்தனாவான்.   மகேந்திர விக்ரமன் என்பவன் தனஞ்செயன் மைந்தன்.

சோழ பாரம்பரியம்

கருகாற் சோழனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் செங்கணன் அதாவது சிம்ம விஷ்ணு சோழன் தோன்றியதாக கூறுவர். அவனுடைய மகன் தான்  நல்லடி கோன் அவன் வழியில் வந்தவன் தான் விஜயாலயன் என்று குறிப்பிடுவர். இவர்களுக்கிடையில் ஸ்ரீ கண்டன் என்ற சோழன் பெயரும் குறிப்பிடப்படுகிறது.  நல்லடி மங்கலம் என்ற பிரம்மதேயக்  கிராமம் செங்கல்பட்டில் உள்ளது.  இந்த செங்கனனைத்  தான் சிம்ம விஷ்ணு சோழன் என்று கருதுவர்.

நம்பியாண்டார் நம்பி தனது திருத்தொண்டாதியில் இடங்கழி நாயனார் என்பவர் முதலாம் ஆதித்த சோழனின் பரம்பரையில் வந்த முன்னோர் என்பர். “சிங்கதுருவனைச் செற்றவன்  சிற்றம்பல முகடு கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குல முதலோன், என்று சிம்ம விஷ்ணு சோழனைப்  பற்றி “சிங்கதுருவனை” என்ற வார்த்தையின் மூலம் அறியலாம்.

களவழி நாற்பது என்ற என்ற நூலில் காவிரி நாடன் கருமலம் (ஊரின் பெயர்) கொண்ட நாள்” என்ற சொற்றொடரில், செங்கணானுக்கும், நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி என்ற அரசர்களுக்கும் இடையே போர் முண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் கட்டி என்பவர் தான் கத்தி அரசன் அதாவது மேலே சாளுக்கியத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மன்.

பிற்கால பல்லவர்கள் 

 திரிநயன பல்லவன்,  அதாவது மூன்று கண்களை உடையவன் கர்நாடகாவில் எட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை நுளம்ப பல்லவர்கள் வம்சத்தில் தோன்றியுள்ளார். இவர்கள் ஒளி குலத்தோர் அதாவது ஒளியர்கள். இவர்களை நாகர்கள் என்பர்.

சோழன் கரிகாற்  பெருவளத்தான் பற்றி கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் பாடியது – “ பல் ஒளியர் பண்பு ஒடுங்கத்  தொல் அருளாளர் தொழில் கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத்  தென்னவன் திறல் கெட சீறினான் சோழன்.”

பல்லவர் தானங்கள் 

அக்கால பல்லவ அரசர்கள் பலவிதமான தானங்களை கொடுத்துள்ளனர் அவைகள் பிரம்மதேயம், தேவதானம் அல்லது தேவ போகம், மற்றும் பள்ளிச்  சந்தம் ஆகியன. இவைகளில், பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்குத்  தானமாக கொடுக்கப்பட்டவை. தேவதானம் என்பது கோவில்களுக்குத்  தானமாக கொடுக்கப்பட்டது.  குறிப்பாக சைவ வைணவ ஸ்தலங்களுக்குப்  பள்ளிச் சந்தம் என்பது புறச் சமயதான வகையாகும். அதாவது ஜைன பௌத்த கோவில்களுக்காக கொடுக்கப்பட்டது அல்லது பிற சமயப் பெரியோர்களுக்காக கொடுக்கப்பட்டது. பரதத்தி என்றால் பிறர்களால் தானமாக கொடுக்கப்பட்டது. ஸ்வதத்தம் என்றால் தான் அளித்தது. பரதத்தம் என்றால் பிறர் அளித்தது. ஆணத்தி  என்பவர் அரசகட்டளையை நிறைவேற்றுபவர் அதாவது தற்கால எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் போல.