மனித உறவுகள் – ஒரு வாழ்வியல் பயணம் முன்னுரை

எனதன்புக்குரிய உறவுகளே , பெரியோர்களே , பெற்றோர்களே , மாணவ மணிகளே! “மனித உறவுகள்” பற்றிய கட்டுரைகளை தொகுத்து ஒரு அழகான தமிழ் புத்தகமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன் . அதற்கான மூலவுரையை இங்கே பதிவிடுகிறேன் . உங்கள் கருத்துக்களையும் அதில் சேர்க்க சித்தமாக உள்ளேன் . உறவுகள் உணர்ச்சிப் பூர்வமானவைகள் என்பதால் இப்புத்தகத்தை நம் தாய் மொழியாம் கன்னித் தமிழிலேயே எழுதுகிறேன் . இதில் ஏதாவது பிழையிருப்பின் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்! உங்கள் கருத்துரைகள் இக்கட்டுரைக்கு மேலும் அழகு சேர்க்கும் என்று நம்புகிறேன் .
இந்த புத்தகம் வெளி வருவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் துணை செய்ய வேண்டும். உறவுகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை நீங்கள் ஒவ்வொருவரும் இந்த குழுமத்தில் பங்கிடலாம். அதன் உண்மைத் தன்மைகளை புரிந்து கொண்டு இலக்கியச் செறிவுடன் என்னால் திறம்பட எழுத இயலும் என்று நம்புகின்றேன். உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்வதற்கு தைரியமும் பொறுமையும் மிக அவசியம். கருத்துக்களை பகிரும் போது பிறர் மனம் புண்படாமல் இருத்தல் நல்லது.
நேர்மையான முனைவர் பட்டம் எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை! முனைவர் பட்டம் பெறுவதற்கு பின்புலமாக மிகப்பெரிய ஒரு வரலாறு இருக்கிறது. அதனால் நீங்கள் ஒவ்வொருவரும் முனைவர் பட்டம் என்கின்ற படிப்பின் மணிமகுடத்தை கண்டிப்பாக ஏதாவது ஒரு வயதில் அடைந்தே தீர வேண்டும்.
உங்கள் சிந்தனையை உரக்கச் சொல்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்!
மெத்தப் படித்தவர்களுக்கு மிகப்பெரிய சறுக்கே அவர்களது வித்தியாகர்வம் தான்! அவர்கள் தன்னில் தாழ்ந்தவர்களை என்றுமே மதிப்பதில்லை. இதனால்தான் மனித உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இவைகளை எல்லாம் வெறும் whatsappபில் பகிர்ந்தால் ஒரு குறிப்பிட்ட குழுமத்திற்கோ அல்லது நபருக்குத்தான் என் சிந்தனைகள் வார்த்தைகளாக பரிணமிக்கும். என் கருத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்திட தீர்மானித்துள்ளேன். அதனால்தான் புத்தகம் எழுத தீர்மானித்துள்ளேன்.
என் எண்ணக் கருத்துக்களை வெறுமனே வாட்ஸாப் செய்திகளாக அள்ளித் தெளித்தால் காலத்தே நிற்காதே என்பதால் நீண்டதொரு பயணமாக நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம் என்பதாலேயே இப்புத்தகத்திற்கு “மனித உறவுகள் – ஒரு வாழ்வியல் பயணம் ” என்பதைத் தலைப்பாக இருக்கட்டும் என்று வைத்துள்ளேன் . இது ஒரு பொதுவான மானிட வாழ்க்கை பயணக்கட்டுரைகளும் உள்ளடக்கியது என்பதால் , அகநானுறு போல சில நிகழ்ச்சிகள் பெயர்கள், இடங்கள் குறிப்பிடாமலிருக்கும் . பல போற்றத்தக்க மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அவர்தம் மேன்மைகளும் புறநானுறு போல வெளிப்படையாகவே இருக்கும் . இருப்பினும் , சம்பந்தப்பட்ட நபர்களின் சம்மதத்தோடு பெயர் குறிப்பிடப்பட்டுமிருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . நான் நூலாசிரியன் என்பதைவிட எனது மற்றும் உங்கள் கருத்துக்களையும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் போல பதிவிட விழைகிறேன் .

இப்புத்தகத்தை என் தந்தை திரு . எதிராஜன் அவர்களின் 100-வது பிறந்த நாளன்று அவர்தம் ஆசியுடன் எழுத ஆரம்பித்தேன் . இப்புத்தகத்தை எங்கள் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிக்கும் , மனைவி , மகன் , மருமகளுக்கும் , பேரப்பிள்ளைகளுக்கும் , சம்பந்தார் மற்றும் அவர்தம் பெருங்குடும்ப உறவினர்களுக்கும் , சாய் சமிதி குடும்பத்தாருக்கும் , சாய் டெக் பெற்றோர்களுக்கும் , மாணவ மணிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன் . நீங்கள் ஒவ்வொருவரும் இந்நூலை படிக்கும்போது உங்கள் நினைவுகளை கண்டிப்பாக என் எண்ணத்துடன் சேர்ந்து அசைபோடுவீர்கள் என்று நம்புகின்றேன். ஏனெனில், நாம் நிகழ்கால நிதரிசனத்தைவிட, கடந்தகால நினைவுகளிலேயே நீண்ட நேரம் பயணிக்க விரும்புகின்றோம் . இனி நான் இல்லை , நாம்தான் என்ற உணர்விக்குத் தள்ளப்பட்டுவிட்டேன் என்ற காரணத்தினால் , இந்த நூலை நம் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும், எனதருமை மாணவ மாணவிகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன் . இப்புத்தகம் நீண்டதொரு பயணம் என்பதால் எங்களுடன் நீங்களும் பயணிக்க ஆயத்தமாக இருக்கவேண்டுமாய் தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் .
நான் ஏன் இந்த புத்தகத்தை எழுதத் திட்டமிட்டேனென்றால் , என் மூத்த சகோதரி அதற்கு ஒரு காரணம் . உறவினர்களுக்கிடையே நாம் அடிக்கடி வந்து போவதில்லை. அதனால் , நாம் ஒன்று கூடி தினமும் இரவில் வாட்சப்பில் சில நிமிடங்களுக்கு பேசலாம் என்று வேண்டுகோள் விடுத்தார்கள் . அதைச் செய்வோம் நல்லது . இருப்பினும் நம் அனுபவங்களை வெறும் பேச்சில் காற்றில் கரைப்பதைவிட நம் வருங்கால பிள்ளைகளுக்கு புத்தக வடிவில் செதுக்கலாமே என்றெண்ணிதான் இம்முயற்சியை ஆரம்பித்துள்ளேன் . வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்று நகைச்சுவையாக வடிவேல் திரைப்படத்தில் கூறுவார்களே! அதைப்போல , தற்கால வாழ்க்கை வரலாறும் நமக்கும் , நம் பிள்ளைகளுக்கும் அவசியம் என்பதால் இந்நூலை எழுதுகிறேன் . இன்று நம்மிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது . புத்தகமட்டுமல்ல , நீண்ட பத்திகளை வாட்சப்பில் அனுப்பினால் முக்கால்வாசி நபர்கள் அதனை தங்கள் நண்பர்களுக்கு அனுப்பித்து விடுகிறார்கள் . ஆதலால் , என்னுடைய சிறிய முயற்சி என்னவென்றால் , நம்மவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வாட்சப்பிலிருந்து வலைத்தளத்து கட்டுரைகளுக்கு அழைத்து வந்து முழு புத்தகமாக படிக்க அல்லது ஒலிப்புத்தகமாக கேட்க வைத்துவிடவேண்டும் என்ற என்னுடைய ஆவல். இப்புத்தகம் நன்று வளர வெளிவர தங்கள் மேலாதரவுகள் இன்றியமையாதன . இதனை ஒலிப்புத்தகமாகவும் மாற்றவும் எத்தனிக்கின்றேன் . நன்றி !
இப்படிக்கு ,
உங்கள் அன்பு மறவா
முனைவர் எ . இராமநாதன்
புத்தகத்தின் பெயர்:
மனித உறவுகள் – ஒரு வாழ்வியல் பயணம்
பொருளடக்கம்
- உறவுகளின் அருமை
- குடும்ப உறவுகள் – அன்பின் அடையாளம்
- நட்பு – நிழலில்லா நீர்க்குமிழி அல்ல
- தாய் – தந்தையின் பாசம்
- மாமா – மாமி, அத்தை, சித்தி எனும் உறவுகள்
- தம்பி – அண்ணன் – சகோதர உறவுகள்
- உறவுகளில் பொறுமையின் பங்கு
- நல்ல உறவுகளுக்கான நெறிமுறைகள்
- திருக்குறள் வழியில் உறவுகள்
- புனித நூல்கள் சொல்லும் உறவுகள்
- சமூக உறவுகள் – மனிதநேயம்
- உறவுகள் & தகவல் தொழில்நுட்பம் (WhatsApp – Zoom – YouTube)
- உறவுகளை அழிக்கும் தவறுகள்
- தெய்வீக உறவுகள் – ஆன்மிகக் கோணம்
- குல குரு குல தெய்வம்





