அருள்மிகு மேகலாம்பிகை சமேத ஶ்ரீ ஆதி மூலேஸ்வரர் ஆலயம் காவிரி வடகரை பாடல் பெற்ற தலங்களில் 59 வது தலம் என்று கருதப்படுகிறது . இந்த கோவில் , திருச்சிராப்பள்ளி அருகில் , திருப்பாலத்துறை என்ற ஊரில் பனையூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது . சுவாமி பெயர் திருமூல நாதர் . அம்பாள் நித்ய கல்யாணி என்றும் , , மோக நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள் . இந்த ஊர் திருப்பாற்றுறை என்றும் மருவி அழைக்கப்படுகிறது . இறைவன் சுயம்பு மூர்த்தியாக இங்கே அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. மார்க்கண்டேயர் இத்தலத்தில் ஈஸ்வரனை அபிஷேகம் செய்து வழிபட தீர்த்தம் கிடைக்காமல் வேண்ட லிங்கத்தில் இருந்து பால் பொங்கி அபிஷேகம் ஆனதாக ஐதீகம்.
கோவில் இருக்குமிடம்
பாற்றுறை நாதர் கோவில் காவேரி மற்றும் கொள்ளிடம் நதிகளின் இடையே திருச்சி கல்லணை சாலையில் , பனையபுரம் என்ற பகுதியில் அழகிய கிராம சூழலில் இந்த கோவில் அமைந்துள்ளது . நந்தி (சிவபெருமானின் வாகனமான காளை) மற்றும் பலிபீடம் (நிவேதனம் வைப்பதற்கான மேலே திரும்பிய தாமரை வடிவ மேடை) கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளன. இத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். கோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற தலம். அழகான சிற்பங்கள். மூலவர் சுயம்பு திருமேனி – சிறிய மூர்த்தி. மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது.
திருச்சி – கல்லணை சாலை ஓரங்களில் நிறைய செங்கற்சூளை காவேரி நதி ஓரத்தில் காணப்படுகிறது . இவ்வாறு அமைந்திருப்பதற்கான முக்கிய காரணம், பண்டைய காலந்தொட்டு நதிகள் உள்ள பகுதிகள் மனித வாழ்விற்கு உகந்ததாக இருந்து வருகின்றன . காவேரி நதியின் கரைகள் நீர்வளம், விவசாயம், குடிநீர், மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்பட்ட முக்கிய பகுதிகள் ஆகும்.
நதிக்கரைகளில் அமைந்த இடங்கள் பொதுவாக செழிப்பான நிலத்துடன் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்ததால், நதியோரங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் உருவானது. மேலும், செங்கற்சூளை போன்ற இடங்கள் நதியின் அருகில் இருப்பதால், கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணல், கற்கள் போன்ற இயற்கை வளங்களை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.
Google Map Link
https://maps.app.goo.gl/iyA4TCzw7Hp6CCw37
தல வரலாறு:
இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது.
சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை அங்குமிங்கும் பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த போன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் , பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அடுத்த நாள் கண்விழித்த அம்மன்னன் அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி “பாற்றுறை நாதர்’ என்றும், தலம் “பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
தலபெருமை
அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது.
தென்திசை எமதர்மராஜாவின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழி படுவதால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், அம்பாள் நித்யகல்யாணி தெற்கு திசை நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இப்பூஜையின் போது அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பௌர்ணமி தோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது. புதுமணத் தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர். மேலும், அனுக்ஞை விநாயகரும் தெற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருளுவது சிறப்பு.
கோவில் கட்டமைப்பு
பராந்தகச் சோழன் , விக்ரம சோழன் போன்ற பிற்கால சோழர்களும் இந்த ஆலயத்தை பராமரித்து வந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தெற்கு வாசல் வழியாக நுழைய வேண்டும் . பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து கருப்பர்,விநாயகர், தண்டாயுதபாணி சன்னதிகளுடன் ராஜ கோபுரம். உள்ளே அர்த்த மண்டபம் உள்ளே சுயம்பு மூர்த்தியாக சிறிய பாணத்துடன் ஈஸ்வரன், தெற்கு நோக்கி அம்பாள் தரிசனம். கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், பிட்சாடனர், மேலும் , யாழ் ஏந்திய தட்சிணாமூர்த்தி தன் இடது காலை சற்றே மாற்றி வைத்து நடன கோலத்தில் காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் .
கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்குப் பதிலாக சங்கர நாராயணர் காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் . பிரம்மா, துர்க்கை, சன்னதிகள் உண்டு . இக்கோவிலின் கணபதி , அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார் . மேலும் , தேவியருடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் தரிசனம் அளிக்கிறார்கள் . அர்த்த மண்டபத்தில் நால்வர், பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலன், அதிகார நந்தி, சுயசாம்பிகை (நந்தி தேவரின் மனைவி ) தரிசிக்கலாம்.
யாழை மீட்டிக்கொண்டு நின்றகோலத்தில் தட்சிணாமூர்த்தி
கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, யாழின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார். சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை “மூலநாதேஸ்வரர்’ என்று பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி இத்தலத்திற்கு யாத்திரை செய்து பயன் பெற்றதால் , பல பெற்றோர்கள் புத்திரப்பேறு கிடைக்கவும், குழந்தைகள் நல்வாழ்க்கை வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆயுட்காலத்தை பலம் பெறச்செய்ய இத் தெய்வத்திற்குக் பிரார்த்தனையின் அடையாளமாக மஞ்சள் வஸ்திரங்களுடன் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிறுவயதில் பிள்ளையை இழந்த சில பெற்றோர்கள் அப்பெருமானுக்கு பிரார்த்தனை செய்து வழிபடுவதுடன் , மீண்டும் ஒரு குழந்தையைப் பெறுவோம் என்று நம்புகிறார்கள். இந்த பூஜை கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் , நடைபெறுகிறது. புதிதாக திருமணம் ஆன தம்பதியரும் தெய்வத்தை வணங்கி, ஆரோக்கியமான மற்றும் அறிவுள்ள குழந்தைகளை பெற வேண்டுகிறார்கள்.
நால்வர் பாடல் பெற்ற ஆலயம்
இத்தல ஈசன் மேல் சம்பந்தர் பத்து பாடல்கள் பாடியுள்ளார்.
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.
…….
மேலும் மற்ற பாடல்களைத் ராகத்துடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் .