முனைவர் எ . இராமநாதன்
நண்பர்களே அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்கள். நம் சமூகத்தில் நாம் பிறரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றோம்? பிறர் நம்மிடமிருந்து எவைகளை எதிர்பார்க்கின்றனர்? இந்த சூட்சமத்தை நாம் புரிந்து கொண்டால் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது தெளிவாகிவிடும்.
குழப்பம் அடைந்து விட்டீர்களா நண்பர்களே? சுருங்கச் சொல்வதென்றால் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள். இந்த தலைப்பில் தான் நாம் பேசப் போகின்றோம்.
இந்த தலைப்பை நான் ஐந்து விதமாக பிரித்து இருக்கின்றேன்.
ஒன்று, நடத்தை மற்றும் கலாச்சாரம்
இரண்டு, கல்வி மற்றும் தொழில்
மூன்று, இனப் பாகுபாடு
நான்கு, உறவுகள் மற்றும் குடும்பம்
ஐந்து, தோற்றம் மற்றும் பழகும் விதம்
இதைத் தவிர உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் நீங்கள் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடலாம்.
இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவது நமது நடத்தை மற்றும் கலாச்சாரம்:
முதலில் நமது நடத்தை மற்றும் கலாச்சாரம் எவ்வளவு கண்ணியமாகவும், மரியாதையாகவும், சமூக விதிமுறைகளை எந்த விதத்தில் நாம் பின்பற்றுகிறோம் என்பதை பற்றியது. நீங்கள் எந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டாலும் அல்லது பணியிடத்தில் இருந்தாலும் உங்களுடைய நடத்தை என்பது மிகவும் முக்கியமானது. உங்களுடைய நடத்தை என்பது, உங்கள் குடும்ப கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கூறலாம்.
இரண்டாவதாக, கல்வி மற்றும் தொழில் மேலும் தொழில் எதிர்பார்ப்புகள் என்பது. சமூகத்தில் மிகவும் முக்கியமான அங்கம் இந்த கல்வியும் தொழிலும் வகிக்கின்றது. கௌரவத்திற்காகவே, நாம் சில பட்டங்களை தேடிக் கொள்கின்றோம். இந்த சமூகம் நமது சாதனைகள் மீது தனது கண்களை வைத்திருக்கின்றது. எனவே இந்த ஒரு டைனமிக் ஆன இப்படிப்பட்ட சாம்ராஜ்யத்திற்குள் நாம் நுழையும்போது, நம்முடைய தகுதிகள், திறமைகள், பட்டங்கள், பதவிகள் இவை அனைத்தும் ஒருசேர நம்மை ஆட்டிப் படைக்கின்றது.
மூன்றாவதாக சமுதாய பாகுபாடுகள்: இந்த விதமான பாகுபாடுகள் பலதரப்பட்டவை. ஜாதி, மதம், மொழி,இனம், பாலினம் என்ற இவை அனைத்தும் இந்த தலைப்பிற்கு அடங்குகின்றது. இவைகள் தான் மரபுகளாக மாறுகின்றன. நாம் எதை வழக்கமாக கொண்டிருக்கின்றோமோ, அதுவே, நம் பழக்கமாக மாறிவிடுகிறது. இதைத்தான் நம் சமூகத்தின் பழக்கவழக்கம் என்று பிரகடனப்படுத்திக்கொள்கின்றோம். தற்காலத்தில் சமத்துவத்திற்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. நீங்கள் பழமைவாதிகளா அல்லது சமத்துவம் பேசும் புதுமைவாதிகளா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நான்காவதாக, உறவுகள் மற்றும் குடும்பம் :
அன்பும் குடும்பமும் சமூக எதிர்பார்ப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. சமூகத்தில், இதன் தாக்கம் மிக ஆழமாக ஓடுகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து குடும்பக் கட்டமைப்புகள் வரை, இது ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரிதான்! இப்படி மாறும் இயக்கவியல், நமது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஐந்தாவது, தோற்றம் மற்றும் நம்மை நாமே எப்படி முதன்மைப்படுத்திக் கொள்கின்றோம் என்பது.
அழகு, தரநிலைகள், ஆடை குறியீடுகள் – இவை அனைத்தும் இந்த சமூக விளையாட்டின் ஒரு பகுதியாகவும், கெளரவத்தின் அளவீடுகளாகவும் அமைந்துள்ளது. நமது ஆடம்பரம் நம்முடைய சுயமரியாதையையும், கௌரவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய ஆடை குறியீடுகள் என்பது, நம் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். நமது குடும்ப மதிப்பை உயர்த்த வேண்டும். ஆனால் சமூகத்தின் முகத்தை சுளிக்கும் படி வைத்துவிடக்கூடாது.
இப்போது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை பற்றி நாம் ஆராய்ந்து விட்டோம். கடைசியாக ஒன்று, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டால் ஏமாற்றம் இருக்காது. எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். நீங்கள் பிறரிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் ஒரு ஏமாளிதான்.
பிறர் எதிர்பார்த்தவைகளை எல்லாம் நீங்கள் செய்கின்றீர்களா? சமுதாயத்தில் நீங்கள் ஒரு கோமாளி. ஏனென்றால், உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களை ஆட்டிப்படைப்பார்கள்.
யாரிடமும் எதையும் எதிர்பார்த்து கைநீட்டி அல்லது கை விரித்து காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
இந்த சமுதாயத்தில் உங்களிடமிருந்து மற்றவர்கள் என்னென்ன எதிர்பார்க்கின்றார்கள் அதைச் செவ்வனே செய்யுங்கள், உங்கள் வரம்புக்கு உட்பட்டு. பாத்திரமறிந்து பிச்சை இடுங்கள் .
வரம்பை மீறினால் நாம் கோமாளிகள் ஆகிவிடுவோம். எடுப்பார் கைப்பிள்ளையாகிவிடுவோம். ஜாக்கிரதை.
பிறருக்கு உதவி செய்வோம். ஒருவரையும் காயப்படுத்த வேண்டாம். பிள்ளைகள் தப்பு செய்தால் கண்டிப்போம் ஆனால் எதுவரை? நம் சொல் பேச்சை கேட்கும் வரை. அதை மீறும்போது, மேற்கொண்டு வற்புறுத்தினால் நாம் அவமானத்திற்கு உள்ளாவோம். அறிவுரை என்பது மருந்து போல. அளவுடன் பகிருங்கள். பிறகு, ஆலோசனைக் கூறு அவமானப்படு என்றாகிவிடும்.
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்தில்
காக்கில் என் காவாக்கால் என், என்பது சினத்தைப்பற்றிய திருக்குறள்.
இது அறிவுரைக்கும் பொருந்தும். யார் நம் சொல்பேச்சை கேட்பார்களோ, அவர்களிடம் அறிவுரை அளவுடன் வழங்குங்கள். செல்லாத இடத்தில், உங்கள் அறிவுரையை யாரும் பொருட்படுத்தாத இடத்தில் பேசிப்பயனென்ன?
மூன்று மகா வாக்கியங்கள்
தெய்வ ப்ரீத்தி, பாப பீதி, சங்க நீதி என்ற மூன்றுக்கும் நாம் கட்டுப்படுவோம்.
அதாவது இறைவன் மேல் பற்று. பாவம் செய்ய பயப்படுதல். நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் குடும்பத்திலும் உள்ள விதிமுறைகளை பேணுதல். இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் கடைபிடிப்பது மிக அவசியம். இம்மூன்றையும் கடைபிடித்தாலே நாம் சமூகம் எதிர்பார்க்கும் சான்றோர்களாகிவிடுவோம்.
என்னுடைய இந்த சில கருத்துக்களில் உங்களுடைய எண்ணங்களையும் சேர்க்க விரும்பினால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை நீங்கள் குறிப்பிடுங்கள் அதைப்பற்றி மேலும் பேசுவோம்.
மிக்க நன்றி. மீண்டும் இணைவோம்!