தென்காசி பயணக் கட்டுரை
by Dr. E. Ramanathan
தென்காசிப் பயணம் என் வாழ்வில் ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவம். பயணக் கட்டுரையை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் என்றால், அதனை ரசித்து எழுதுவது என்பது முக்கனியின் சாறெடுத்து அதில் இன்பத் தேன் கலந்து பருகுவது போல இருக்கின்றது. நம் மாணவர்கள் பலர் இதைப்போல ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய அவா. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதியார் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை?
நானும் என் துணைவியாரும் சென்னையிலிருந்து திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பில் பயணம் மேற்கொண்டோம். புதுக்கோட்டையில் காலை வேளையில் என் மாமியார் வீட்டில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு திருச்சிக்கு இரவு பத்தரை மணி அளவில் பேருந்தில் நின்றுகொண்டே பயணித்தோம். பயணம் சற்று சிரமமாகத்தான் இருந்தது!! முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்தது, என்ன செய்வது?!
திருச்சியிலிருந்து தென்காசிக்கு, சிலம்பு அதிவிரைவு இரயில் வண்டியில் அதிகாலை இரண்டு மணிக்கு புறப்பட்டோம். காலை 8 மணி அளவில் தென்காசி இரயில் நிலையத்தை அடைந்தோம். எங்கள் சம்பந்தியின் இனிமையான வரவேற்பில் மனம் மகிழ்ந்தோம்!
திருமலை திருக்கோயில்
தென்காசியில் எங்கள் சம்பந்தி சகோதரியின் வீட்டில் தங்கினோம். காலை சிற்றுண்டி முடித்து விட்டு, திருமலை திருக்கோயிலுக்கு எங்கள் சம்பந்தியுடன் ஒரு டாக்ஸியில் பயணம் செய்தோம். தென்காசியில் ஒரு விசேஷம் என்னவென்றால் நகரத்தில் போகும் இடமெல்லாம் நீங்கள் நிறைய சிறுசிறு உணவுகளையும் பலகார கடைகளையும் காணலாம். மிகவும் அருமையான இயற்கைச் சூழல், பொதிகை மலைத் தென்றல் நம்மை தழுவிச் செல்லும் போது … அப்பப்பா … என்ன ஒரு ஆனந்தம்!! காரில் நாங்கள் ஏசி போட்டுக் கொள்ளவே இல்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளையும் தமிழ்நாட்டில் பார்க்கும் பொழுது, நமக்கே வியப்பாகத்தான் உள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ்நாடு கேரள எல்லையில் பகிரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழிலை என்னென்று சொல்வது! மலையும் மலை சார்ந்த இடங்களும், கார் மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை தழுவும் அந்த அழகே நம் மனங்களை கவர்கின்றது.
Click here for photos in Thirumalai kovil
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் 1,200 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொல்லப்படுகிறது. இது தென்காசி அருகில் சாம்பவர் வடகரையில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று கண்கொள்ளாக் காட்சியாக வயலும் வாய்க்காலும் உள்ளன. அங்கங்கே தென்னந்தோப்புகள் மரங்கள் வனப்புடன் தோன்றுகின்றன. மூன்று சிறு அருவிகள் தரைமட்டமாக எங்கிருந்தோ வருகிறது. மக்கள் இதனை அகஸ்தியர் அருவி என்று கருதி அதில் குளித்து விட்டு அகஸ்தீஸ்வரர் சன்னதி செல்கின்றனர். சிலர் அச்சன்கோவில் அருவியிலிருந்து அடி ப்பக்கமாக வருகிறது என்று கூறுகின்றனர். சிலர் ஆரியங்காவு கணவாய் இருந்து ஒரு சிறிய நதி அடி பக்கமாக வந்து இத்திருத்தலத்தில் அருவியாக கொட்டுகிறது என்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் ஒரு சிறிய குகையில் மிக அழகாக சிவலிங்கம் இருக்கின்றது. அருகில் அகத்தியர் சிலையும் உள்ளது. அகஸ்தியர் அருவியில் சிந்து கங்கை யமுனை பிரம்மபுத்திரா சரஸ்வதி கிருஷ்ணா காவேரி வண்ணார் குளம் கருங்குளம் போன்ற ஜீவ நதிகளில் இருந்து வரும் தீர்த்தமாக மக்கள் இங்கே கொண்டாடுகின்றனர்.
தொடரும் ……