Learning is not everybody’s cup of tea

கல்வி கடைச்சரக்கு அல்ல! அதை பணத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் வாங்கவே முடியாது.

கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளேயானாலும், கற்பதற்கேற்ற மனநிலையில் இருந்தால்தான், ஒரு மாணவன் கல்வியை கற்க முடியும் ! அதுபோலவே, ஒரு பக்தன் மெய்ஞ்ஞானத்தை உணர முடியும் !!அவனருளாலே அவன் தாள் பணிந்து என்பது போல எதுவுமே இறைவன் அருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும். அறிதல், புரிதல், உணர்தல், தெளிவு பெறுதல், திறனடைதல், ஞானம் பெறுதல் இவையனைத்தும் அனைவருக்கும் அவ்வளவு எளிதாக இறைவன் அருளில்லாமல் கிடைப்பது அரிது.

ஒருவன் கர்ம மார்க்கத்தை அல்லது பக்தி மார்க்கத்தை அல்லது ஞானமார்க்த்தை கடைபிடிப்பது என்பது அவனவன் வாங்கிவந்த வரம். எந்த மார்க்கமாயிருந்தாலும், நம் பிறவிப்பயனை அடைய எடுத்த மார்க்கத்தில் சிரத்தையுடன் எவனொருவன் பணி செய்கின்றானோ அவனே இறைவனின் சிறந்த படைப்பு. மரம், செடி, கொடி, விலங்கு, பாக்டீரியா, வைரஸ் என்ற அனைத்துவகை உயிரினங்களும் இறைவன் இட்ட கட்டளையை செய்து முடிக்கின்றன, மனிதனைத்தவிர!!

எல்லா உயிர்களுக்கும் இதைத்தான் செய்யவேண்டும் என்று வித்திட்டு ப்ரோக்ராம் செய்து அனுப்பிய இறைவன், மனிதனுக்குமட்டும் சுயமாக ப்ரோக்ராம் செய்யும் திறனை அருளிவிட்டு இவ்வுலகை அவரது நாடக அரங்காகிவிட்டான்! மனிதனோ அதை வைத்துக்கொண்டு குரங்காகிவிட்டான். மனிதனுக்கு இந்த சுயமாக சிந்திக்கும் திறனில்லாவிட்டால்….. நினைத்துப்பாருங்களேன்? இதைத்தான் கண்ணதாசன் பாடினார். “பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்.”

மனிதன் என்பவன் தெய்வமாகலாம், என்பதை உத்தேசித்தே இறைவன் தன்னையே உருக்கி மனிதனாக்கி சுதந்திரமாக திரிய விட்டான். தத்வமஸி! நான் தான் கடவுள்! நானே ப்ரஹ்மா ! நானே பலவாறாக இருக்கின்றேன் என்ற மகா வாக்கியங்களை பெரியோர்கள் மூலம் சொல்லிவைத்தான். ஆனால், இன்றோ, தன்னை உணர்தலே நம் தலையாய கடமை என்பதை மறந்துவிட்டு எவன் தலையை மொட்டை அடிக்கலாம் என்று திரியும் அசுரக்கூட்டத்தில் ஒருவனாக மனிதன் மாறிவிட்டான். அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது என்பதை மறந்து, இறைவன் கொடுத்த சந்தர்ப்பங்களையும் மறந்து, அற்பமான விஷயங்களில் தன் நேரத்தையும், சக்தியையும், வீர்யத்தையும் விரயம் செய்துவிட்டான்!!

பகவான் ஸ்ரீ ஸத்ய சாய் பாபாவின் அவதார தினமான இன்று ஒரு வைராக்கியம் கொள்வோம்! நல்ல விஷயங்களை மட்டுமே பாருங்கள், கேளுங்கள், படியுங்கள், பகிருங்கள். இன்டர்நெட்டில் பிரௌசிங் செய்வதை விட உங்கள் மனமாகிய இன்னர் நெட்டில் ஆழ்ந்து பயணியுங்கள். நினைப்பதற்கு, எந்த நெட் ஒர்க்கும் தேவையில்லை.

Sri Sathya Sai Baba | Sathya sai baba, Sai baba quotes, Sai baba

பேனாவை எடுங்கள். எழுதிப்பாருங்கள். ஆயிரம் எண்ணக்கருத்துக்கள் பொங்கிவரும். கண்ட காட்சிகளையும் காண்பித்து உங்கள் கண்களை காவு வாங்காதீர்கள். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சோம்பேறியாய் இருக்காதீர்கள். கற்கும்போது, கண்களுக்கு நாம் கடைசி சந்தர்ப்பம் தான் கொடுக்க வேண்டும். சிரவணம் (கேட்டல்), மனனம் (மனத்தால் சொல்லிப்பார்த்தல்), நிதித்யாஸனம் (ஒன்றையே நினைத்தல்) என்பதே கற்றலின் முறை. இப்போது எழுதும் வசதியும், ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்க்கும் வசதியுமிருப்பதால், எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் படைப்புகளை பலரறியச் செய்யுங்கள். உங்கள் மொழித்திறனும் வளம்பெறும்.

Happy Birthday to Bhagawan Sri Sathya Sai Baba

95th Year Birthday Celebrations. 23rd November 2020.