திருவொற்றியூர் கோவில் கல்வெட்டில் தக்கோலம் போர் பற்றிய முக்கிய செய்தி
பொதுக்காலம் 949-ல் நிகழ்ந்த தக்கோலப் போர் முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்தது . அப்போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த பூதுகன் என்ற கங்க அரசர் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன.
கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் கிடைக்கின்றன . போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். அதன் காரணம் என்ன என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டும் . சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை. பிறகு ஏன் கன்னரதேவர் தஞ்சையையும் சாய்த்துவிட்டதாக ஒரு பொய்யான கல்வெட்டைப் பதிவு செய்யவேண்டும் ?
சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக (வீரமரணமடைந்தவர்களாக ) இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியதுதான் இங்கே குறிப்பிடவேண்டிய வரலாறு.
அதற்கு முன்பாக , பிற்கால சோழ மன்னர்களின் பட்டியலைப் பார்த்துவிடுவோம் . அப்போதுதான் தக்கோலாப் போரில் வீரமரணமடைந்த இராஜாதித்தர் யார் என்பது புரியும் .
பிற்காலச் சோழ மன்னர்கள் :
- விஜயாலயச் சோழன் (கி . பி . 846 – 907)
- ஆதித்தச் சோழன் – 1 (கி . பி . 871 – 907)
- பராந்தக சோழன் – 1 (கி . பி . 907 – 953) – கன்னரதேவன் இம்மன்னனின் சகோதரன் .
- கண்டராதித்த சோழன் (கி . பி . 950 – 957)
- அரிஞ்சய சோழன் (கி . பி . 956 – 957) – இராஜாதித்த சோழனும் , கண்டராதித்த சோழனும் இம்மன்னனின் மூத்த சகோதரர்கள் . உத்தமசீலி என்பவன் இம்மன்னனின் தம்பி .
- சுந்தர சோழன் (பராந்தகன் -2) (கி . பி. 957 – 970)
- உத்தம சோழன் (கி . பி . 970 – 985) (கன்னடராதித்த சோழனின் மைந்தன் )
- இராஜ ராஜ சோழன்-1 (கி . பி . 985 – 1014) (சுந்தர சோழனின் மைந்தன் ) – ஆதித்த கரிகாலன் இம்மன்னரின் அண்ணன்
- இராஜேந்திர சோழன் – 1 (கி . பி . 1012 – 1044)
- இராஜாதி ராஜ சோழன் – 1 (கி . பி . 1018 – 1054)
- இராஜேந்திர சோழன் – 2 (கி . பி . 1051 – 1062)
- வீர ராஜேந்திர சோழன் (கி . பி . 1063 – 1070)
- அதி ராஜேந்திர சோழன் (கி . பி . 1070) – வீர ராஜேந்திரனனின் மைந்தன்
இதன் பிறகுதான் முதலாம் இராஜேந்திர சோழரின் மகள் வயிற்றுப்பேரன் குலோத்துங்கச் சோழன் சோழ அரியணையேறுகிறான் .
முதலாம் பராந்தகச் சோழரின் மூத்த மைந்தனான இளவரசன் இராஜாதித்தன் தான் தக்கோலப் படையில் யானைமேலமர்ந்து போரிடும்போது வீரமரணமடைந்தவன் . இராஜாத்திதனின் நீர் மேலாண்மை மிகக்குறிப்பிடத்தக்கது . ஏனெனில் , இவ்விளவரசன்தான் இன்றைக்கும் சென்னை மக்களின் உயிர்நாடியாக விளங்கும் வீராணம் ஏரியை தன் தந்தை பெயரால் வீர நாராயணபுரம் ஏரியைக் கட்டியவன் . இவன் தந்தை பராந்தகனுக்கு வீர நாராயணன் என்ற பெயருமுண்டு .
இளவரசன் இராஜாதித்தனுக்கு நம்பிக்கையான படைத்தலைவன் ஒருவனிருந்தான் . அவன் பெரியார் வெள்ளங்குமரன் . இவன் கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றான் . இவன் கேரள இராஜசேகரனின் மைந்தன் . இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் நம்பிக்கைக்குரிய படைத்தலைவரானான் . இளவரசர் இராஜாதித்தனுடன் தளபதியாக இணைந்திருந்தபோதும் தக்கோலப் போரின்போது தக்க தருணத்தில் மன்னரோடு துணையாக இவன் ஏன் நிற்கவில்லை என்பதன் முக்கிய காரணம் ஆராயப்படவேண்டும் .
தன் அவச்செயலால் உளம் நொறுங்கிய வெள்ளங்குமரன் , உலக சுகங்களை வெறுத்தொதுக்கி ஊரெங்கும் நாடோடியாகத் திரிந்து பின் கங்கையை அடைந்தான் . அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. பிறகு ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தஞ்சமடைந்தார் . தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன் ’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார் .
திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன இப் பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலை கல்வெட்டாக பகிர்ந்துகொண்டுள்ளார் . கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைத் தெரிவித்தாலும் , சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பற்றி பேசுகிறது. ஆனால் இப்பண்டிதர் தன பூர்வாசிரமத்தில் , தளபதியாக இருந்தபோது ஏன் தனது இளவரசனுடன் தக்காலப் போரில் பங்கேற்கவில்லை என்பதைக் குறிப்பிடாமல் அதற்கான வருத்தத்தை மட்டும் திருவொற்றியூர் கோவிலிலுள்ள கல்வெட்டில் பதிவிட்டுள்ளார் .
இப்போது இக்கல்வெட்டின் பரிதாப நிலையை பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது . ஆயிரம் வருட பழைமையான கல்வெட்டு கம்பீரமாக இராஜாதித்தன் வீர வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக கம்பீரமாக குப்பைகூளங்களின் மத்தியில் நிற்கின்றது . ஆனால் அதைப்பற்றிய தற்கால குறிப்புப் பலகையில் வெறும் சட்டம் மட்டும் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது . நம் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை செப்பனிடுமா ?