Visit to Mysore Palace and Bandipur Tiger Reserves

எழுதியவர் : முனைவர் இராமநாதன்

மைசூர்

அன்பான நண்பர்களே , பெற்றோர்களே , மாணவர்களே !
சுற்றுலா என்பது மனித வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடல் மற்றும் மனதில் அமைதியை ஏற்படுத்துவதோடு, புதிய இடங்களை கண்டறியவும், புதிய கலாச்சாரங்களை அனுபவிக்கவும் உதவுகிறது. மேலும், சுற்றுலா உலகளாவிய பொருளாதாரத்தை வளர்க்கவும், பல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது நம் அறிவைப் பரப்புவதற்கும், பன்முகமுள்ள மக்களிடையே புரிதலை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஸ்ரீரங்கப்பட்டினம்

சுற்றுலா எப்போதும் நம் தினசரி மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், புதிய அனுபவங்களை பெறவும், நம் வாழ்க்கையை நிறைவடையச் செய்யவும் முக்கியமானது.
குழந்தைகளுக்கான சுற்றுலா என்பது மிகவும் அவசியமானது. இது கல்வியை மறந்து, வாழ்க்கை பற்றிய புதிய அனுபவங்களை பெற உதவுகிறது. சுற்றுலா மூலம் குழந்தைகள் புதிய இடங்களைப் பார்வையிடுவதோடு, அவற்றின் கலாச்சாரம், வரலாறு, இயற்கை சூழல் போன்றவற்றைப் பற்றி அறிய முடிகிறது. இது அவர்களின் அறிவையும், சிந்தனையையும் விரிவடையச் செய்கிறது.

சாமுண்டீஸ்வரி கோவில்

மற்றும், குழந்தைகள் சுற்றுலா செல்லும்போது தங்களின் சமூக நுண்ணறிவை மேம்படுத்தி, நண்பர்கள் மற்றும் சக குடும்பத்தினருடன் உறவு வலுப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் இது உதவியாக அமைகிறது.

இதனால்தான், என் மகன் சாய்நாத் இவ்வருடம் எனது பிறந்த நாளை மைசூர் சுற்றுலா சென்று கொண்டாடலாமா என்று கேட்டதும் , உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன் .

நான் , என் மனைவி , மகன் , மருமகள் , பேத்தி இவர்களுடன் என் சம்பந்திகள் குடும்பத்தாருடன், ஆக மொத்தம் 10 பெரியவர்கள் மற்றும் இரண்டு வாண்டுகளுடன் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மாலை 6:30 மணியளவில் டெம்போ ட்ராவெலர் வேனில் கிளம்பினோம் . ஓட்டுநர் ஏழுமலைக்கு நாங்கள் ஆரம்பித்திலேயே நன்றி கூறிக்கொள்கிறோம் . ஏனென்றால் அலுக்காமல் தளுக்காமல் வண்டியை பாதுகாப்பாக ஓட்டிச்சென்று திரும்பி வீடு வந்து சேர்த்தாரல்லவா ?

மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் .

அதற்காகத்தான் ! ஹோட்டல் தங்கும் வசதிகளை எனது மாணவர் ஜோனின் தந்தையின் நிறுவனமான மேஜிக் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி சொல்கிறோம் . எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் எங்களுக்காக இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்த சாய்நாத் , ஹரிணி , ராம் சங்கர் , மற்றும் பத்மா ஆகிய எங்கள் பிள்ளைகளுக்கு நானும் என் சம்பந்தார்களும் நன்றி கூறிக்கொள்கிறோம் . எங்கள் பேரன் பேத்திகளுக்கு எங்களுடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் உரித்தாகுக! எல்லாம் வல்ல இறைவனுக்கு நாங்கள் அனைவரும் நன்றி செலுத்துகிறோம் .

எங்கள் குடுபத்தினர் மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்துக்கொண்ட போட்டோ

எங்கள் பயண அட்டவணையை என் மருமகளும் , மகனும் மிக அருமையாக திட்டமிட்டனர் . அதன் விவரம் பின்வருமாறு .

  • 16-08-2024 – 6:30 PM – சென்னை கொளத்தூரிலிருந்து வேன் புறப்பாடு
  • 17-08-2024 – 5:00 AM – மைசூர் ரூபா ஹோட்டல் சென்றடைதல்
  • 17-08-2024 – 9:00 AM – மைசூர் விலங்கியல் பூங்கா
  • 17-08-2024 – 5:00 PM – மைசூர் அரண்மனை
  • 18-08-2024 – 9:30 AM – பந்திப்பூர் புறப்பாடு
  • 18-08-2024 – 2:30 PM – பந்திப்பூர் ரிசார்ட் விண்ட் பிளவர் சேர்தல்
  • 19-08-2024 – 7:15 AM – பந்திப்பூர் புலிகள் சரணாலயம் சபாரி
  • 19-08-2024 – 4:00 PM – பந்திப்பூரிலிருந்து சென்னை புறப்பாடு
  • 20-08-2024 – 2:00 AM – சென்னை கொளத்தூர் வீடு திரும்புதல்

போகும்போது பொத்தேரியிலிருந்து சககுடும்பத்தார்கள் ஏறிக்கொண்டனர் . அதேபோல , சென்னை திரும்பும்போது பொத்தேரியில் இறங்கிக்கொண்டனர் .

நான் எனது பேத்தி , மற்றும் சம்பந்தார்களுடன்

இடையிடையே பெரியவர்கள் ஆசைப்பட்ட கோவில் தரிசனங்களை நம் இளசுகள் பெருந்தன்மையுடன் நிறைவேற்றி வைத்தனர் . ஸ்ரீரங்கப்பட்டினம் மற்றும் சாமுண்டீஸ்வரி கோவில்களுக்குச் சென்று வந்தோம் . வாண்டுகள் ஆசையான குதிரை சவாரியும் மைசூர் அரண்மனையைச்சுற்றி நடந்தது .

என் சம்பந்திகள் எனக்கு மைசூர் சந்தன யானை பொம்மையை என் பிறந்தநாள் பரிசாக வழங்கினர் !

தற்காலத்தில் , குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க இத்தகைய குடும்பச்சுற்றுலாக்கள் மிக அவசியம் என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம் . நீங்களும் அத்தகைய சுற்றுலாக்களுக்கு உங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாகச் சென்று வாருங்கள் .

பண்டிபூர் புலிகள் சரணாலயம்

மைசூர் சுற்றுலா – முதல் நாள் காலை (17-08-2024)

இது மைசூர் ரூபா ஹோட்டலின் வரவேற்பறை!  மிக நன்றாக உள்ளது விசாலமாகவும் உள்ளது,  மைசூர் அரண்மனை மற்றும் விலங்கியல் பூங்கா அருகிலேயே இருப்பதால் இந்த ஹோட்டல் தங்குவதற்கு  ஏதுவாக உள்ளது. எங்கள் வாண்டுகள் ஒரு இடத்தில் நிற்பதாக இல்லை!  அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடட்டும்.  வாசலில் அந்த கிருஷ்ணர் மிகவும் அருமையாக காட்சியளிக்கிறார்!  மரத்தாலே பண்ணப்பட்டது.  என் பேர குழந்தைகளுக்கு இந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. 

I Love Mysuru

காலை சிற்றுண்டிக்காக,  நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே நடந்து தான் வந்தோம்.  ஒரு சின்ன நடை பயிற்சிதான்!  அப்போது அங்கு ஒரு ரவுண்டானாவை கண்டோம். அதில் மைசூர் மன்னரின் சிலை மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  சாலை ஓரங்களில் அலங்காரமான தோட்டங்கள் உள்ளன.  அதில் இந்த மூன்று யானைகள் அற்புதமாக சிலை வடித்து இருக்கிறார்கள்.  அங்கிருந்து கொண்டு நாங்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.  நம்ம பசங்க எங்களை விட பரபரப்பாக இருந்தார்கள்.  எனது மனைவியும், எங்களுடைய பேரன் மற்றும் பேத்தி,  சம்பந்திகள் குடும்பம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  இந்த அன்னப்பறவைகள் மிக அழகு சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  மைசூரில் சாலையோர தோட்டங்களை சரிவர பராமரிப்பு செய்கிறார்கள்.  ஐ லவ் மைசூர் என்ற ஆங்கில வாசகம் மைசூருக்கு நம்மை அன்புடன் வரவேற்கின்றது. இவை அனைத்தும் GoPro Hero Black 12 ஆக்ஷன் கேமராவில் 4k வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் நன்கு விசாலமான சாலைகள்  போடப்பட்டுள்ளன. ஒருவேளை தசரா பண்டிகையின் போது கூட்டத்தை சமாளிப்பதற்காகவே நன்கு விசாலமான சாலைகளை போட்டிருப்பார்கள்.

காலைச் சிற்றுண்டி முடித்தவுடன் நாங்கள் மைசூர் விலங்கியல் பூங்காவிற்குச் சென்றோம் .

தொடரும் . ..